கோவை மாவட்டம், துடியலூர் வட்டத்திற்கு உட்பட்டது பன்னிமடை பஞ்சாயத்து. இப்பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த விவசாய நிலத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறிவந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
அப்போது விவசாய நிலத்தில் சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு குழியில் பாம்பு மற்றும் மயில்கள் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.
இதில், அந்தக் குழியில் 2 பாம்புகள், 2 காடைகள், 1 காகம், 10 மயில்கள் இறந்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் சேதமடைத்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனிடையே, ஒரே குழியில் 10 மயில் உட்பட பல உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் விவசாய நில உரிமையாளர் ராஜகோபாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.