மத்திய அரசின் ''ஜன் அவுஷதி'' திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்துக் கடைகளினால் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அத்யாவசிய முக்கிய மருந்துகளின் விலையில் கட்டுப்பாட்டினைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பகுதிகளில் ஜன் அவுஷதி மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்துக் கடைகளில் சுமார் 400, 500 ரூபாய்க்கு தனியார் அல்லது வெளிக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் இந்த ஜன் அவுஷத் மருந்தகத்தில் வெறும் 40 முதல் 50 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் கோவை இராமநாதபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளர் கூறுகையில், ''தனியார் மருந்துக் கடைகளில் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இனி மக்களுக்கு இல்லை. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.