கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியானது நீர்நிலைகள் நிறைந்த, அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு, யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்நிலையில், வியாழனன்று அப்பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இறந்துள்ள யானைக்கு சுமார் ஒரு வயது மட்டுமே இருக்கும் என்றும், யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மைத் தகவல் தெரியவரும் என்றனர்.

கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இப்பகுதியின் அருகாமையில் கைவிடப்பட்ட ஒரு குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அந்த யானை உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.