கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா யோகமையத்தில், ஈசா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 10 வது ஆண்டுவிழா அப்பள்ளி வளாகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கல்வி முறை குறித்தும் அதில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கலந்தாலோசனை கூட்டம் நடை பெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது :-
கல்வி என்பது அரசியலுக்கு உட்படுத்தப்பட்டதல்ல. இது எந்த ஒரு அமைப்பையும் சாராமல் தனிச்சிறப்பை கல்வி முறை பெற்றுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர், இந்தியாவில் கட்டப்பட்டும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் பொது மக்கள் பங்கீடு இருந்தது. உதாரணமாக, கட்டிடங்கள் கட்டுவது, பள்ளியை மேம்படுத்த உதவுவது போன்றவை. ஆனால், தற்போதைய சூழலில் கல்வியில் பொதுமக்கள் தலையீடு குறைந்து கொண்டே வருகிறது. எப்போது அரசின் துணையோடு மக்களாக முன்வந்து கல்வியை மேம்படுத்த முயல்கின்றனரோ அப்போது தான், கல்வி புரட்சி நடை பெறும்.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. இது தான் நம் பலம்.ஒரு போதும், நம் பலத்தை நாம் இழக்க கூடாது
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஈசா யோகா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசு தேவ் பேசுகையில், 'பிறப்பு முதல், இறப்பு வரை அறிவை வளர்த்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லை. கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது. அதுவே நம்மை மேம்படுத்தக்கூடியது. முந்தைய காலங்களில் இளங்கலை படிப்பை முடித்த பின்னர், முதுகலைப்பட்ட படிப்பிற்காக தங்கள் குழந்தைகளை பெற்றோர் வெளி நாடுகளுக்கு அனுப்புவர். ஆனால், இன்று 10ம் வகுப்பு முடித்த உடனேயே குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். இந்திய கல்வி முறையில் குறைபாடு உள்ளதே இந்த மாற்றத்திற்கு காரணம்.
அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு ஆண்டுக்கு மூன்று முறை பெற்றோர், தங்கள் குழந்தைகள் பயிலும் கல்வி நிலையங்களுக்கு சென்று மேற்பார்வையிடும் வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் போது, பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் ஒழுக்க நெறிகளை கற்பார்கள். இந்திய கல்வி முறையும் வளர்ச்சிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஈசா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில், மத்திய அமைச்சர் காந்தர் ஸ்ரீனிவாச ராவ் கலந்து கொண்டார். மேலும், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பல தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள் மற்றும் ஈசா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
