கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 07.11.2016 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மூலம் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தைச் சார்ந்த துடியலூர் புதுமுத்து நகர் இன மக்களுக்கு தனிநபர் தொழில் தொடங்குவதற்கு ரூ.3லட்சத்து 15ஆயிரம் காசோலையாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் நரிக்குறவர் இன மக்களுக்கு மானியமாக வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)பரமசிவம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.