கோவையை கலக்கும் செயின்ட் மேரி மேல்நிலை பள்ளி மாணவ விவசாயிகள்!


பள்ளியில் தயாரிக்கும் சத்துணவையும் அதில் உள்ள காய்கறிகளையும் வீணாக்காமல் உண்ணும் மாணவர்கள் மாநிலத்தில் உண்டோ? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு சத்துணவில் பரிமாறப்படும் பொருட்களை வீணாக்கி வருகின்றனர் மாணவர்கள். தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பெற்றோர்கள் குறை கூறினாலும், பெற்றோர் கண்காணிப்பில் பிள்ளைகள் சாப்பிடாத காரணத்தாலே அதிகமான காய்கறிகள் வீணாக்கப்படுவதாக பள்ளிகளின் தரப்பில் இருந்து பதில் கூறப்படுகிறது. இந்த கேள்விக்கு, எங்கள் பள்ளியில் யாரும் காய்கறிகளை வீணாக்குவது இல்லை என்று பதில் தருகிறார்கள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள புனித மரியன்னை பள்ளி மாணவர்கள். ஆச்சரியமான இந்த பதிலுக்கு விடை தேடி புறப்பட்ட போது, மீண்டுமொரு ஆச்சரியம்.!



மதிய உணவு இடைவேளையில் உணவு பாத்திரத்துடன் பார்க்க வேண்டிய மாணவர்களின் கையில் மண்வெட்டியும், சட்டியும் இருந்தது. சாப்பிடவில்லையா? என்று கேட்டால், விரைவில் சாப்பிட்டு முடித்துவிட்டு, செடிக்கு தண்ணீர் ஊற்றவும் களையெடுக்கப் போவதாகவும் அவர்கள் தந்த பதில் ஆச்சரியத்தை அளித்தது. பள்ளி மாடிக்கு சென்று பார்த்த போது, அங்கு வெண்டையும், கத்தரியுமாய் காயத்துத் தொங்கியது. மாணவர்களே விவசாயம் செய்து, விளைவித்து அதை பள்ளியில் தயாரிக்கப்படும் சத்துணவிற்காக கொடுத்து வருகிறார்கள். அன்பாய், பாசமாய், நண்பர்களே வளர்த்தெடுத்த காய்கறிகள் என்பதால், அதில் ஒருதுளி கூட வீணாக்காமல் சாப்பிடுகிறார்கள் சக மாணவர்கள்.



இதுகுறித்து புனித மரியன்னை உயர் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரான பீட்டர் மரிய தாஸ் கூறியதாவது:- 

''இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பது பலரின் கனவு. இந்த முறையை எங்கள் பள்ளியில் சாத்தியப்படுத்த முடியுமா? என்று தேடிய போது, பாண்டியராஜன் என்ற சமூக ஆர்வலரின் அறிமுகம் கிடைத்தது. அவரின் வழிகாட்டுதலின்படி எங்கள் பள்ளியின் கான்கிரீட் கூரையில் மாடித் தோட்டம் அமைக்க முடிவெடுத்தோம். முதற்கட்டமாக ரூ.12 ஆயிரம் செலவு செய்து மாடித் தோட்டம் அமைத்தோம். எங்கள் பள்ளி ஆசிரியர் விவேகானந்தன் என்பவரை அதற்கு பொறுப்பாசிரியராக நியமித்தோம். அவரது வழிகாட்டுதலின் பேரில் 7-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள் சேர்ந்து இந்த மாடித் தோட்டத்தை பாராமரித்து வருகிறார்கள்.



கத்தரி, வெண்டை, பீட்ரூட், காரட், அவரை, கீரை வகைகள் உள்ளிட்ட காய்கறிகளை எந்த வித ரசாயன உரங்களும் இன்றி இயற்கை முறையில் விளைவித்து வருகிறார்கள். எங்கள் பள்ளியில் 900 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அதில், சுமார் 200 பேர் பள்ளியில் சத்துணவு உண்பவர்கள். மாணவர்களே விளைவித்த காய்கறிகள் என்பதால் சத்துணவை வீணாக்காமல் சாப்பிட்டு வருகின்றனர். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த முறையை கடைபிடிக்கும் போது, மாணவர்களிடையே விவசாயம் குறித்த விழிப்புணர்வும், அவர்களின் வாழ்வியல் குறித்த புரிதலையும் நம்மால் ஏற்படுத்த முடியும்''. இவ்வாறு அவர் கூறினார். 

மாணவர் புகழேந்தி கூறுகையில், 

''படிக்கும் இடத்திலேயே விவசாயம் செய்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் உணவு இடைவேளையிலும், பள்ளி முடிந்த பின்னும் இந்த தோட்டத்தை பராமரித்து வருகிறோம். ஒரு விவசாயி என்னென்ன முறைகளை கையாண்டு ஒரு பயிரை விளைவிப்பாரோ, அதன்படியே இயற்கை உரங்களை பயன்படுத்தி நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். மரங்களில் இருந்து விழும் இலைகளைக் கொண்டு நாங்களே இயற்கை உரம் தயாரிக்கிறோம். இதை என் பெற்றோர் மற்றும் பக்கத்து வீட்டாரிடம் கூறிய போது என்னை பாராட்டினார்கள். அவர்கள் வீட்டிற்கும் மாடித் தோட்டம் அமைத்து தரும்படி கேட்டுள்ளனர். பாண்டியராஜன் என்பவர் எங்களுக்கு முதன் முறையாக விவசாயத்தின் அடிப்படைகளை கற்றுத் தந்தார். பிறகு, ஆசிரியர் விவேகானந்தன் தினமும் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் பயிரிட்ட இந்த செடிகளில் இருந்து ஒரு போகம் அறுவடை செய்துள்ளோம். தொடர்ந்து இந்த விவசாயப் பணிகளை செய்வோம்'' என்று கூறினார். 

பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களை கார்பரேட் நிறுவனங்களுக்காக தயார்படுத்தும் இன்றைய காலகட்டதில், விவசாயத்தின் அருமையை  உணர்த்தியதற்காகவும், மாணவர்களின் எதிர்காலத்தை தற்போது முதலே ஒளிர வைத்த புனித மரியன்னை பள்ளிக்கு வாழ்த்துக்கள்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...