நாட்டின் பொருளாதாரத்தை மனதில் வைத்து சீர்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்துள்ள நடவடிக்கையினை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகைபுரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
''நாட்டின் சீர்திருத்தத்தை மனதில் வைத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திமுக வரவேற்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கருப்புப் பணத்தை மீட்டு சாமானியர்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது ?. பொது மக்களுக்கு உரிய காலவகாசம் வழங்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அறிவிப்பு வெளியான போது பெட்ரோல் பங்க், பாலகம், மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் வாங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் தற்போது எங்கேயும் அந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப்போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.