கோவை மாவட்டத்தில் 28 குளங்கள் உள்ளன. அதில் 10 குளங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. மீதம் உள்ளவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அதில் ஒன்று பேரூர் குளம். நொய்யல் நதிக்கரையை அடுத்த புட்டு விக்கி பாலத்தின் அருகே அமைந்துள்ளது இந்த பேரூர் குளம்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக இப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 குடும்பங்கள் குளத்தின் கரைப்பகுதியில் கூடாரம் அமைத்து குடிபுகுந்துள்ளனர்.

மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகாமில் குழாய் பதிக்கும் பணிக்காக கோவை வந்ததாகவும், ஒரு மாத காலத்தில் ஆந்திராவுக்கு திரும்ப இருப்பதாகவும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுபணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆந்திர மக்கள் பேரூர் குளக்கரையில் கூடாரம் அமைத்திருப்பது தொடர்பான விவரம் எங்களுக்கு தெரியவில்லை. தற்காலிக பணி நிமித்தமாக அந்த மக்கள் குளக்கரையில் குடிபுகுந்திருக்கலம். உடனடியாக இது குறித்து விசாரணை நடத்துகிறோம். அவ்வாறு அவர்கள் இராணுவ பணி காரணமாக அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்' என்றார்.

மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் உள்ள குளம் நிரம்பும் வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குளத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பது சிறந்தது.