கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஜோதி (42) கடந்த மாதம் 22ம் தேதியன்று கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராதநிலையில், அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி ஜோதியின் ஏடிஎம் அட்டையினை பயன்படுத்தி ஒரு தொகையினை எடுத்து கொடுத்துள்ளார். பின், ஜோதியின் ஏடிஎம் அட்டைக்கு பதிலாக தான் கொண்டுவந்திருந்த போலி ஏடிஎம் அட்டையினை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜோதியின் கைபேசிக்கு ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் போலி அட்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த ஏடிஎம் அட்டை கடைசியாக பயன்படுத்தப்பட்ட பகுதியினைக் கொண்டு இந்த நூதனமோசடியில் ஈடுபட்டவரை பிடித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (32) என்பதும், ஆனைமலை அடுத்த தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.