கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி பிரதீபா (32). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு பிரதீபா மற்றும் அவரது சகோதரி கிருத்திகா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர். சின்னியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி சங்கிலையை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அருகிலிருந்த பொது மக்கள், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். இது குறித்து பிரதீபா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.