பீளமேடு பகுதியில் விட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கபணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, பீளமேடு ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். பின் திங்களன்று இரவு திரும்பி வீட்டிற்க்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.