தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளாவின் மிக அருகில் உள்ள மாவட்டங்களில் ஒன்று கோவை. கேரளாவில் இருந்து வரும் கோழி இறைச்சிகளால் கோவையின் பல்வேறு இடங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இது தொடர்பாக, கோழிப்பண்ணை உரிமையாளர் பாலாஜி கூறியதாவது:- இந்தியாவில் முதன்முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டது. பறவைக் காய்ச்சலில் மொத்தம் 35 வகைகள் உள்ளன. அதில் மனிதர்களை பாதிப்பது 2 மட்டுமே மனிதர்களை தாக்கக் கூடியது. மற்ற வகைகள் கோழிகளின் உற்பத்தியை பாதிக்கிறது. மற்றும் அதன் இறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கிறது. பறவைகளுக்கும், பறவைகளால் மனிதர்களுக்கும் ஏற்படும் இந்த நோயை தடுக்க கோழிப் பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் பறவைக் காயச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை கால்நடைத் துறையினர் பல கோழிப்பண்ணைகளுக்கு நேரில் சென்று மாதிரிகளை சேகரித்து போபாலில் செயல்படும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இதனால், இந்நோய் பரவுதல் தடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறை துணை இயக்குநர் பானுமதி ‘சிம்ப்ளிசிட்டி’ செயலிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :-
கோவை மாவட்டத்தைப் பொருத்த வரை பறவை காய்சசல் தொடர்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் உயிரிழந்தால் உடனடியாக விலங்குகள் நலவாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கைது
கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் சரக்கு வாகனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விலங்குகள் நல வாரியத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் சோதனைச் சாவடி அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகத்திற்கு கொண்டுவரும் எந்த கோழிகளும், கோழிக் கழிவுகளும் அனுமதிக்கப்பட கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அத்துமீறி, கோழிகளை கோவைக்கு கொண்டுவரும் வாகன ஓட்டிகள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவர் என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள்
கோழிப் பண்ணைகளில் பணிபுரிவோர் கையுறை அணிந்து கோழிகளை பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் தங்கள் பணி முடிந்த பின்னர் 'ஆன்டி-செப்டிக்' சோப்புகளை உபயோகித்து உடலை நன்கு கழுவ வேண்டும். நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளை புதைக்கும் பணியில் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் தோற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பணிகளை மேற்கொள்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மருந்துகளும், மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் பறவைக்காய்ச்சல்
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பறவைக்காய்ச்சல் பரவுதல் என்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் பறவைக் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். பறவை காய்ச்சல் குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கோவை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் என்பது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்பட்ட பறவைகள் கோவை மாவட்டத்தில் இல்லை என்பதால்,கோழி இறைச்சிகளை உண்ணலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.