500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களிலும் போதுமான தொகை இல்லாமல் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து செயல்படும் மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவப் படத்தை காலணியால் அடித்தும், தங்களது பணப்பையில் இருந்து தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் போன்ற நகல் காகிதத்தை எடுத்து கிழித்து வீசி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.