கோவை ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவம் பார்க்க தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களிடம் கட்டணமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதால் இவரை ஆவாரம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ”20 ரூபாய் டாக்டர்” என்றே மக்கள் இவரை அழைப்பார்கள். நேற்று காலை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இவரது கிளினிக்கு மருத்துவம் பார்க்க வந்த ஏழை, எளிய மக்கள் டாக்டர் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கிளினிக் வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலியும் செலுத்தினர்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் தனது கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தினார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்திய நிலையில், ஏராளமான மக்கள் இவரது கிளினிக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
கோவை மாநகரில் சாதாரண ஆலோசனைக்கு கூட 200 ரூபாய் 300 ரூபாய் என மருத்துவர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காவே வாழ்ந்த மருத்துவர் இறந்து போனது கோவை பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.