கோவை மாவட்டம், அவநாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னி கிளப்பில் திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்திருந்த திருநங்கை கல்கி இதுகுறித்து கூறுகையில்,
என் வாழ்வில் மிகவும் விளையாட்டுத்தனமாக கடந்த மார்ச் மாதம் ஓவியத்தில் தனது பயணத்தை தொடங்கினேன். பின்னர் மிகவும் தீவிரமாக இதில் நேரம் செலுத்தி ஓவியங்களை வரைய தொடங்கினேன். தற்போது இந்தியா முழுவதும் சில கண்காட்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விற்பனை ஆகும் ஓவியங்களுக்கான தொகையில் ஒரு பகுதியினை திருநங்கைகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். தற்போது 2 லட்சம் ரூபாய் வரை திரட்டி திருநங்கையரின் கல்விக்கு உதவப்பட்டுள்ளது.

திருநங்கைகள் தமது பெற்றோர், சமூகத்தினரால் கைவிடப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு கண்ணியமான வேலை கிடைக்கப்பெற வேண்டும். அவர்களுக்கும் கல்வி, திருமணம் போன்ற பல்வேறு கனவுகள் உள்ளது. ஆனால் அதனை அடையமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த ஓவியக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் எனது ஓவியங்களுக்கான தொகையில் 60 சதவிகிதம் ஆதரவற்ற திருநங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். இச்சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு வரும் திருநங்கைகளின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுவது இந்த கல்வி மட்டுமே தான்'' என்றார்.