கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரடிமடை, பூலுவப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ஞாயிறன்று (இன்று) மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்பட துவங்கியுள்ளன.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் தனிநபர் வீடுகட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் பயனாளி ஒருவருக்கு ரூ.2.10 லட்சம் மானியம் வீடுகட்ட வழங்கப்பட்டு வருகின்றது. வீடு விரிவுபடுத்த ரூ.1.60 லட்சம் மானியம் வழங்கப்படுகின்றது.
மேலும், வீட்டுமனைப்பட்டா உள்ளவர்களுக்கு வீடுகட்ட ரூ.6 லட்சம் வங்கி கடன் வழங்கப்படுவதுடன் அதற்கு வட்டியில் 6.50 சதவிகிதம் அரசு மானியம் வழங்கப்படுகின்றது. அதேபோல் ஏற்கனவே செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் புதியதாக துவங்கப்படும் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்கடன்கள் வங்கியின் மூலம் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இவற்றினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.
இதைத்தொடர்ந்து மத்திபாளையம், சென்னனூர், வடிவேலம்பாளையம், நாதகவுண்டன்பாளையம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்கள் வழங்கிய மனுக்களின் தன்மைக்கேற்ப குறிப்பாக, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை ஆகிய மனுக்கள் உட்பட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ், வட்டாட்சியர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.