விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). கோவையில் பி.என்.புதூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவரது வீட்டின் கதவு பூட்டியே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் வீட்டின் கதவருகே சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.
இதைத்தொடர்ந்து, தினேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்படவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சசிகுமார் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சாய்பாபா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சசிகுமாரின் மனைவி உயிரிழந்துவிட்டதால் அவர் மனமுடைந்து தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.