கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும், இந்து இயக்க தலைவர்கள் கொலை செய்யப்படுவதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்து சமுதாய ஒற்றுமை மையம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்தா காலனியில் வானதிசீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்வதாகவும், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான சம்பவங்களில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது குறித்து பல முறை வலியுறுத்தியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், லவ்ஜிகாத் என்ற பெயரில் இந்து இயக்க பெண்களை குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.