இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் கோவை சிஎம்எஸ் பகுதியில் புதனன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, இப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் நமது நிருபரிடம் கூறுகையில்,

இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். கல்லூரி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். மாணவர்களின் இச்செயல் எங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பணி முடிந்தவுடன் தொடர்ந்து இதேப்போன்று சுத்தமாக வைக்க நாங்கள் பணியாற்றுவோம்'' என்றார்.


தூய்மை பணி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. இதற்கான அனைத்து உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. மாணவர்களும், தன்னார்வலர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்ப்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரமைப்பு திட்ட துணை அலுவலர் ஹேமலதா, மண்டல துப்புரவு அலுவலர் குணசேகரன், ஸ்வச் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இப்பணி நடைபெற்றது.

