பாரத ஸ்டேட் வங்கி பெரு முதலாளிகள் 63 பேரின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனவும் அவர்களது வங்கி கணக்குகளை துல்லியமாக கண்காணித்து வருவதாகவும் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது முதல் தற்போது வரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். 100 ரூபாய் நோட்டுகள் வங்கியில் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் 500 ரூபாய் புழக்கம் இல்லாததாலேயே பணப்புழக்கத்தில் பிரச்சிணை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அருந்ததி பட்டாச்சார்யா தற்போது ரிசர்வ் வங்கி அதிகளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு வழங்கியுள்ளதால் விரைவில் சகஜ நிலை திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி 63 தொழிலதிபர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனவும் அவர்களிடமிருந்து கடன்களை வசூலிக்கும் வகையில் அவர்களது வங்கி கணக்குகளை கண்காணித்து வருவதாகவும் கூறினார். நாடு முழுவதும் இது வரை மாற்றப்பட்டுள்ள மொத்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கு ஸ்டேட் பாங்கில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பொதுமக்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது பெருமளவு குறைந்துள்ளதால் விரைவில் நிலைமை சீரடையும் என நம்பிக்கை தெரிவித்தார். வங்கி பரிவர்த்தனைகளை அதிகரிப்பதே தொழில் முனைவோருக்கு அதிக அளவு லாபத்தை ஏற்படுத்தும் எனக்கூறிய அவர் மத்திய அரசின் இந்த திட்டத்தை முழுமையாக வரவேற்பதாகவும் தெரிவித்தார். கோவையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அருந்ததி நாளை செய்தியாளர் சந்திப்பிலும் பேசவுள்ளார்.