கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ள நோட்டுகள் ஒழிப்பு என்ற பெயரில் மத்திய அரசால் கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்க், தபால் நிலையங்கள், மின் கட்டணம் செலுத்துதல், மாநகராட்சி வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான காலவரம்பு நவம்பர் 24ம் தேதி (இன்று) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இனி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய வங்கிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் தங்களது கணக்குகளில் இந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் புதிய கணக்கைத் தொடங்கியும் அதில் டெபாசிட் செய்யலாம்.
டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், அதை 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிளைகளில் மட்டும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். அந்த வங்கிகளின் விவரம் விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இன்று ஒருநாளைக்கு எங்கு பயன்படுத்தலாம்?
1. அரசு மருத்துவமனைகள்
2. பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
3. மருந்தகங்கள், பால் அங்காடி
4. நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள்
5. தகன மேடை
6. ரெயில் டிக்கெட்டுகள்
7. அரசு பஸ் போக்குவரத்து
8. விமான டிக்கெட்
9. மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள் கட்டணம்
10. பிரதான இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறுமிடங்கள்
உள்ளிட்ட இடங்களில் மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இன்று இரவு வரை பயன்படுத்த முடியும்.