கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி வரி செலுத்தாத 452 குடிநீர் இணைப்புகள் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க், தபால் நிலையம், பாலகம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24ம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாநகராட்சியின் சார்பில் மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களிலேயே செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
இதனிடையே, கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 23ம் தேதி வரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் மாநகராட்சி வரி செலுத்தாமல் இருந்த வரிதாரர்களின் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலம் 51-ஆம் வார்டு பகுதியில் 2013 முதல் 2017 வரை மாநகாட்சி வரியாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 340 ரூபாய் செலுத்தாத வணிக வளாகத்தின் முன்பு மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்கடையின் உரிமையாளர் உரிய வரிப்பணத்தினை செலுத்தியபின் அந்த குப்பைத் தொட்டிகள் அங்கிருந்து அகற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.