காவல்துறையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகர காவல் நிலையங்களில் வாரந்தோறும் 'நோ யுவர் போலீஸ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காவல் துறை குறித்து தெரிந்துகொள்வர்.
அதன்படி, கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர். அங்கு இருக்கும் அனைத்து துறைகளுக்கும் சென்று போலீசாரின் அன்றாட பணிகளை தெரிந்து கொண்டனர். இதையடுத்து, துணை கமிஷனர் (போக்குவரத்து) சரவணன் மாணவர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர், சமூகத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வரும் மனிதர்கள் அனைவரும் பள்ளி அளவில் தேசிய மாணவர்படை, சாரணர் படை ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றார். மேலும், மாணவர்கள் அந்த இயக்கங்களில் சேர்ந்து சமூக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர், காவல் துறையில் பணியாற்ற மாணவர்கள் துணை கமிஷனரிடம் ஆர்வம் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.