தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஜோதிடர் உயிரிழந்ததை அடுத்து உரிய விளக்கம் அளிக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் குமார். மனைவி கஸ்தூரி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். குமாருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்ததை அடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் எனப்படும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமாருக்கு பகலில் பார்வை குறைபாடு எற்பட்டதால் அவர் தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 வருடங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால் இந்த பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் அதே மருத்துவமனைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, குமார் கே.எம்.சி.எச். சென்ற போது அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று குமாருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த குமாரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில் இன்று மதியம் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை முழு பலனளிக்காததால் குமார் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உரிய விளக்கம் அளிக்க கோரி அவினாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர் . குமார் இறந்ததற்கான உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆதரவற்ற நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.