பள்ளி மற்றும் கல்லுரிகள் இருக்கும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு போதை பொருட்களை விற்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே சிகரெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பள்ளி அருகே இருந்த இரு பெட்டி கடைகளில் சிகரெட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடைக்காரர்களான சரவணன் மற்றும் பூவேல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.