500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால், தற்போது தமிழகத்தில் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.


அதன்படி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மண்டலத் தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன் முன்னிலையில், நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டினை அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
வணிகர்கள் மற்றம் தொழில் முனைவோருக்கு நடப்புக் கணக்கில் வாரம் ஒருமுறை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உயர்த்தி 2 லட்சம் ரூபாய் வரையிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறிய, நடுத்தர வணிகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் இருப்பில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேவைக்கேற்ப வங்கிகள் மூலமும், ஏடிஎம் இயந்திரம் மூலமும் பணம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.