சிறிய காய்கறி கடைகளில் பணமில்லா வர்த்தகம் செய்வது குறித்து பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வங்கி அதிகாரிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பணமில்லா வர்த்தகம் மேற்கொள்ளும் முறையை பின்பற்றும் பொருட்டு பா.ஜ.க சார்பாக கோவை தியாகி குமரன் மார்கெட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, காய்கறி வியாபாரிகளிடம் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள கியூ ஆர் கோடு பயன்படுத்தி விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளித்தனர்.
இதன் மூலம் வியாபாரிகளின் இந்தியன் வங்கி கணக்கில் இருந்து உருவாக்கிய கியூ. ஆர் கோட்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் இந்தியன் வங்கி ஆப் மூலம் ஸ்கேன் செய்து , பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திராத வாடிக்கையாளர்களும் இச்சேவையை பயன்படும் வகையில் ஆப் உருவாக்கும் முறையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு வருவதாகவும் , வங்கியில் கணக்கு இல்லா வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு துவங்க பா.ஜ.க நிர்வாகிகள் சார்பாக உதவிகள் மேற்கொள்ளப்படும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.