கோவை மாவட்டம், கணபதியைச் சேர்ந்தவர் ஆர்.மில்டன் ஆனந்த் (44). இவருக்கு எம்.ஷீபா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், மில்டன் ஆனந்த் கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இரத்த அழுத்தம் காரணமாக திடீரென சுயநினைவின்றி விழுந்தார். உடனடியாக அரவது உறவினர்கள் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின், டிசம்பர் 1ம் தேதியன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக கேஎம்சிஎச் சிறப்பு மருத்துவர்களும், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மில்டன் ஆனந்தின் குடும்பத்தினர் முன்வந்தனர். அதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளான கல்லீரல், கண்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.
கல்லீரல் கேஎம்சிஎச் மருத்தவமனையில் உள்ள நோயாளிக்கு பொறுத்தப்பட்டது. தோல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள இரு வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி கூறியதாவது:-
தற்போது மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இவர்கள் போன்று பலரும் தாமாக முன்வந்து உடலுறுப்புகளை தானமளித்தால் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்'' என்றார்.