
உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பங்கஜா மில்ஸ் மைதானத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கரூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் லீக் சுற்று முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் விளையாடுவர். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும் எனவும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான அணியில் கலந்து கொள்ளும் என போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்பவர்கள் 100 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள், 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் என 3 பிரிவுகளாக ஒவ்வொரு போட்டிகளிலும் 14 வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தனர். ஒலி எழுப்பும் பிளாஸ்டிக் பந்துகள் இப்போட்டிக்கு உபயோகிக்க படுவதாக தெரிவித்தவர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பரஸ்பரம் தனியார் தொண்டு நிறுவனம் சுடர் ஒளி மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.நாளை மாலை இறுதி போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.