கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் அளவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த டிச. 2 மற்றும் 3 ஆகிய 2 தினங்களில் மட்டும் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் அளவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு 32, காளப்பட்டி, காஞ்சிமா நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 40.2 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வார்டு 5, கவுண்டம்பாளையம், எஸ்.பி நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று, வடக்கு மண்டலம், வார்டு- 29, சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 1 சென்ட் அளவிலான இடங்களும், வார்டு- 41, மணியகரம்பாளையம் சாலை, அபிராமி நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 14 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், வார்டு-97, குறிச்சி, விக்னேஷ் நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.2 கோடி மதிப்பிலான 22 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வார்டு-87, குனியமுத்தூர், கஸ்தூரி நகரில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.6 கோடி மதிப்பிலான 24 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு-72, நேரு மைதானம் அருகில் உள்ள ஆடிஸ் தெருவில் 60 சென்ட் அளவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.55 கோடி மதிப்பிலான 1.26 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.