முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் தடையை மீறி, மது விற்பனை வெகு விமரிசையாக நடைபெற்றது.
டாஸ்மாக் கடைகளிலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொள்ளும் பார் ஊழியர்கள் மது பாட்டில்களை மறைத்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தனர். இதையறிந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பீளமேடு, ஆர்.எஸ்.புரம் , தொண்டாமுத்தூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் தடையை மீறி மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 451 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு விற்பனையாகும் மதுவை அருந்துபவர்கள் மது போதையில் தேவையில்லாத ரகளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இந்த மூன்று நாட்களும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.