மத்திய அரசு அறிவித்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் எம்.என்.கந்தசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
1. இந்த அறிவிப்பு இந்திய மக்களை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
2. இந்தியப்பொருளாதாரம் காந்தியடிகள் கூறியதுபோல கிராமப்பொருளாதாரத்தை நம்பியுள்ள பொருளாதாரம்.
3. உலக அளவில் எடுத்துக்கொண்டால் இந்திய மக்களிடம் மட்டும்தான் சேமிப்பும், சிறுசேமிப்பும் பழக்கம் அதிகமாக உள்ளது.
4. இந்த சிறு சேமிப்பு பழக்கமில்லாததால்தான் அமெரிக்கப் பொருளாதாரமே வீழ்ச்சியுற்றது.
5. உலகம் பொருளாதாரமான அமெரிக்கப் பொருளாதாரமும் இதன் காரணமாகத்தான் வீழ்ச்சியுற்றது.
6. மோடியின் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு கிராம மக்களை விவசாயத்தொழிலாளர்களை, குறிப்பாக விவசாயக்கூலி வேலை செய்யும் பெண்மணிகளை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
7. இந்திய மக்கள் தொகையில் சுமார் 20 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளரும் 80 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள மக்களிடம் செல்போன் வசதி இல்லாதவர்கள்தான் உள்ளனர்.
8. டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்திய மக்கள் தொகையில் சரிபாதிபேர்களுக்கும் குறைவாகவே உள்ளனர்.
9. வட இந்தியப்பகுதிகளில் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற இடங்களில் வங்கி வசதிகள் மிக மிகக்குறைவு.
10. அரசு அலுவலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் போன்றோர் மட்டுமே டெபிட், கிரெடிட் கார்டு உபயோகப்படுத்த தெரிந்திருக்க முடியும்.
11. பணபரிவர்த்தனை இல்லாமல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை வைத்து கிராமத்து பகுதிகளில் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும்.
12. பணமில்லா பொருளாதாரம் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிடையாது.
13. இதன் மூலம் அதாவது இந்த அறிவிப்பின் மூலம் பழைய 500, 1000 ரூபாய் கள்ளப்பணத்திற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் கள்ளப்பணம் உருவாகும்.
14. கள்ளப்பணம் வைத்திருக்கின்ற முதலாளிகள் பற்றிய அறிவிப்பும், வெளி நாட்டிலிருந்து கள்ளப்பணத்தை இங்கே கொண்டு வந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?
15. பிரதமர் அலுவலக ஊழியர்கள் முதல் கடைநிலை கிராம நிர்வாக ஊழியர் வரை உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பெறும் லஞ்சத்தை ஒழிக்காமல் நாட்டில் கருப்புப்பணத்தை ஒழிக்க முடியாது என்பதை முதலில் மோடி உணரவேண்டும்.
16. மேலும் மோடியின் இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு முன் தன் சக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், இந்நாள் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர்கள் மூலம் முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்த முற்பட்டிருக்க வேண்டும். இத்தனையும் தாண்டி தான் தோன்றித்தனமாக ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தது மோடியின் பொறுப்பற்ற செயலாகும்.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் எம்.என்.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.