கோவை எல்&டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். ஒரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜீவா. இவரது மனைவி ஜெபா, ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா ஆகியோருடன் இன்று பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற ஜீவா, மத பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோவை வெள்ளலூர் திரும்பினார்.
அப்போது சித்ரா என்ற உறவுக்கார பெண்ணையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவை திரும்பினார். கோவை எல்&டி புறவழிச்சாலை அருகே கஞ்சிகோணாம்பாளையம் என்ற பகுதி வழியாக வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா உள்ளிட்ட மூவரும் பலியானார்கள். சித்ரா என்ற பெண் மட்டும் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து போத்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.