கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (22). அப்பகுதியிலேயே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதியன்று பேரூரில் இருந்து மாதம்பட்டியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பெஞ்சமின் பலியானார்.
இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும், விபத்தில் இறந்த பெஞ்சமீனின் மனைவி கவிதா இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 6.57 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கச்சொல்லி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி ஆணையிட்டார். இதனை செயல்படுத்த அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் தவறியதால் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரை செல்லக்கூடிய 140டி பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.