கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், பழனியம்மாளின் பேரனான கருணாகரன் வழக்கம்போல காலை உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்தபோது பழனியம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து கருணாகரன் தனது உறவினர்களுக்கும் இரத்தினபுரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி பழனியம்மாள் துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும் பழனியம்மாளின் கையில் இருந்த 2 சவரன் மதிப்பிலான தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பழனியம்மாளின் பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.