கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கேக் நிறுவனம் இந்த ஆண்டு புதுமையாக மனித உருவ வடிவில் கேக்குகளை செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் கேக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட புதிய விதமாக கேக்குகள் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு உருவ படத்தை கேக்குகளை பொறித்தும், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை கொண்டும் தயாரித்தது.

அதேப்போல் இந்த ஆண்டு விருப்பமானவர்களின் உருவத்தை கேக் சிலையாக செய்ய துவங்கி உள்ளது. குறிப்பாக திருமண ஜோடிகள், பிரியமானவர்களின் உருவம், கிருஸ்துமஸ் தாத்தா உருவம் என தயாரித்து வருகின்றனர்.
இந்த மாதிரியான உருவ கேக் சிலைகளை செய்ய 5 ஆயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்டர் கொடுத்து ஒரு வாரத்தில் விரும்பிய உருவம் கேக் சிலையாக செய்து கொடுக்கப்படும் எனவும் கேக் வடிவமைப்பாளர் சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.
அதே போல் சாக்லெட், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான கேக்குகளும் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். குறிப்பாக மனித உருவ வடிவ கேக்குகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.