'ஆல் இன் ஆல் அழகு ராஜா' என்றாலே கவுண்டமணியும், அவரது நகைச்சுவைகளும், பெட்ருமாஸ் லைட்டும், ‘இந்த காரை வச்சிருந்த....’ என்கிற காமெடி காட்சியும் நமக்கு நினைவுக்கு வரும். கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்த காரின் பெயர் தான் ஜானவாசம் கார்.
ஜானவாசம் கார் குறித்து இன்றைய இளைய தலைமுறையினர் பாதி பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருமண நிகழ்வின் போது மணமகனும், மணமகளும் ஜோடியாக அமர்ந்து ஊரை வலம் வர உபயோகிக்கும் கார் தான் ஜானவாசம் கார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த காரை வாடகைக்கு விட்டு வாழ்கையை நடத்தி வருபவர் தான் கோவை முல்லை நகரை சேர்ந்த முத்துசாமி. காரை வாடகைக்கு விடுபவர் எப்படி ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆவர்? என்ற கேள்வி எழுகிறதா? நடிகர் கவுண்டமணியின் பெட்ருமாஸ் லைட் காமெடி காட்சியை நினைவு கூர்ந்து பாருங்கள். அந்த காலத்தில் இருந்து முத்துசாமியும் பெட்ருமாஸ் லைட்டையும் வாடகைக்கு விடுகிறார். சிறிய அளவில் ஒரு கடை, வாசலில் 3 ஜானவாசம் கார்கள் நிற்க, கடையின் கூரையெங்கும் கேஸ் லைட்டுகளும் ஆடிக்கொண்டிருக்க, உதடுகள் மறைந்துபோகும் அளவிற்கு தாடியோடு தடாகம் சாலையையே உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர் தான் முத்துசாமி.

ஜானவாசம் கார் குறித்தும், தனது பெட்ருமாஸ் லைட் அனுபவங்கள் குறித்தும் முத்துசாமி நம்மிடம் கூறியதாவது :-
பழனி தான் எனது சொந்த ஊர். எனது 10 வயதில் கோவை வந்தேன். சில பேக்கரிகளில் டீ மாஸ்டராக வேலை செய்து காலத்தை கழித்து வந்தேன். பின்னர், மண்ணெண்ணெய் அடுப்பு பழுது பார்க்கும் வேலையை கற்றுக்கொண்டு, தடாகம் சாலை ஓரம் உள்ள பிளாட்பாரம் ஒன்றில் சிறிதாக குடிசை போட்டு மண்ணெண்ணெய் அடுப்பு சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தேன். அப்போது தான் பெட்ருமாஸ் லைட் பற்றி தெரிந்தது. அவற்றை வாங்கி திருமண நிகழ்சிகளுக்கு வாடகைக்கு கொடுத்தேன். அந்த கால கட்டத்தில் தான் கவுண்டமணியின் பெட்ருமாஸ் லைட் காமெடி வெளிவந்தது. ‘இது தான் மேண்டில், இதில் இருந்து தான் பளீர் என்று வெளிச்சம் வரும்’, என்று கவுண்டமணி கூறுவார். அதை வைத்து பலர் என் பின்னால் கிண்டல் செய்தனர். தற்போது அதை நினைத்துப் பார்க்கையில் சிரிப்புதான் வருகிறது. தற்போது கேஸ் லைட்டுகள் வந்துவிட்டதால் பெட்ருமாஸ் லைட்டுகள் வழக்கொழிந்து போயின.

பெட்ருமாஸ் லைட்டை ஒவ்வொரு திருமண நிகழ்சிகளுக்கும் கொண்டு செல்லும் போது, ஜனவாசம் காரை பற்றி தெரிந்து கொண்டேன். அதை வாங்கி வாடகைக்கு விட முடிவு செய்தேன். 1970 காலகட்டம் அது. பெரிய ஆட்கள் உபயோகித்த கார்கள் விற்பனைக்கு வந்தது. அந்த கார்களை குறைந்த விலைக்கு வாங்கினேன். திருமண நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அதில் நிறைய மாறுதல்கள் செய்து வாடகைக்கு விட்டேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து மொத்தம் 9 கார்கள் வாங்கி வியாபாரம் நடத்தி வந்தேன்.
எனது கார்களை பார்த்து பலர், சினிமா சூட்டிங்கிற்கு வாடகைக்கு கேட்டனர். ப்ளாக் அண்ட் வைட் சினிமா தொடங்கி சங்கமம், சிம்மாசனம், கச்சேரி ஆரம்பம், பட்டத்து யானை போன்ற பல படங்களுக்கு எனது கார்களை கொண்டு சென்றனர். தமிழகம், கேரளா மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களில் திருமண நிகழ்சிகளுக்கு எனது கார்கள் வாடகைக்கு சென்று வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. அங்கு அவர் எனது காரை ஓட்டிப்பார்த்தார்.
இந்த ஜோடிக்கு தான் திருமணம் என்பதை ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாகவே ஜானவாசம் கார் பயன்படுத்தப்பட்டது.

இதற்காக கார் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அதில் மணமகன் மற்றும் மணப்பெண்ணை அமர வைத்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். காரின் இருபுறமும் கேஸ் மற்றும் பெட்ருமாஸ் லைட்டுகள் ஒளிக்க அந்த ஊர்வலம் காண்பவரின் கண்ணை கவரும் வண்ணம் இருக்கும்.
திருமணத்திற்கு ஜானவாசம் கார் இல்லை என்று மாப்பிள்ளை ஒருவர் கோபித்துக்கொண்ட கதையெல்லாம் உண்டு.
இன்றைய கால கட்டத்தில் ஜானவாசம் காரில் செல்வதை கேலியாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர். தொழில் சிறிது சிறிதாக குறைந்து போக என்னிடம் இருந்த ஒன்பது கார்களில் 6 கார்களை விற்றுவிட்டேன். தற்போது 3 கார்கள் மட்டும் உள்ளது. அதிலும் மாதத்திற்கு இரண்டு வாடகைகள் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது.
ஒரு வாடகைக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். அதில் தான் பெட்ரோல் மற்றும் டிரைவர்களுக்கு ஆகும் செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது 84 வயதான முத்துசாமி, ஜானவாசம் கார்களும், மேண்டில் விளக்குகள் மட்டுமே தனக்கும் தனது மனைவிக்குமான வாழ்வாதாரம் என்கிறார். வருமானம் போதவில்லை என்பதைவிட, இந்த தொழில் அழிந்துவிடும் என்கிற வருத்தம் தான் அவரது கனத்த குரலில் தெரிந்தது.