புதிய ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் பிடிபடுவது பிரதமர் மோடிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனை அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க மாற்று சக்தியாக உருவெடுத்து வருவதாகவும், நேர்மறையான அரசியலின் மூலம் வருங்காலத்தில் மிகப்பெரும் வெற்றியை பெறுவோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் புறவாசல் வழியாகவோ, இன்னொரு கட்சியை உடைத்தோ, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியோ ஆட்சியை பிடிப்பதில் பாஜகவிற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் பணநடமாட்டம் உள்ள இடத்திலும், அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக சந்தேகப்படும் இடங்களில் தான் சோதனை நடத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கைகளில் மத்திய அரசின் தாக்கம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதால்தான், மக்கள் தெருவில் நிற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது சுமத்தியுள்ள ஊழல் புகார் என்பது ஏற்கனவே உச்சநீதிமன்றத்தினால் புறந்தள்ளப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற புகார் என கூறிய அவர், ராகுல்காந்தியை பார்த்தால் பூகம்பம் வருகிறதோ இல்லையோ, சிரிப்பு தான் வருகிறது என தெரிவித்தார்.
அதிகளவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் பிடிபடுவதை கண்டு பிரதமர் மோடியே ஆச்சரியப்படுகிறார் எனவும், பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் ஊழல் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் போது மக்கள் விரும்பும் மாற்றம் வருமென தெரிவித்தார்.
பண்பாட்டுடன் கூடிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டுமென்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவான, வலிமையான வாதங்களை முன்வைத்து இருப்பதாகவும் அவர் கூறினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போராட்டங்கள் நடத்துவதினால் எந்த தீர்வும் வராது எனவும், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.