கோவைப்புதுார் பகுதியை அடுத்த தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் தன்ஸ்ரீகாந்த் இவரது மனைவி ஸ்ரீஜா,(36). ஸ்ரீஜாவுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்தது. இதனால் அவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. தொடர்ந்து, அம்மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்ரீஜா கடந்த 26ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜா நேற்று உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை மறுத்த மருத்துவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதனை வெளியான பின்னரே உண்மை நிலை தெரியும் என்றனர்.
இதைத் தொடர்ந்து, தில்லை நகர் பகுதியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.