கோவை மாவட்டம், 92-வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்தெடுக்கின்றனர் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பறையினையும், கிருஷ்ணசாமி நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

பின், கிருஷ்ணசாமி நகர் பகுதியில், மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும், ரூ.11.13 கோடி மதிப்பீட்டில் நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, அண்ணா நகர் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்த க.விஜயகார்த்திகேயன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின், அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சி பொது இடத்தினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.