கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 47-வது வார்டு, கணபதி பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, செந்தில் நகர் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று அபேட் மருந்தினை நீர்த் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுவதையும் பார்வையிட்டார்.

பின், அதேப்பகுதியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதையும், அம்பேத்கர் நகர் பகுதியிலுள்ள பொது கழிப்பிடத்தையும், செந்தில் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.