வாலாங்குளம் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கிடைக்க நடவடிக்கை கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், வாலாங்குளம் பகுதியில் 35 வருடத்திற்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீதமுள்ளவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். வாலாங்குளம் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள் என மாவட்ட அதிகாரிகள் சொன்னார்கள். பின்னர், 2015 மே 8ம் தேதியன்று எங்களை வாலாங்குளம் பகுதியை விட்டு அகற்றி எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒரு கடிதம் கொடுத்தனர்.
அக்கடிதம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை தங்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.