கோவை அருகே குளத்தில் முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் யானைகள் விரட்டியதில் வெள்ளியங்கிரி என்ற வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் கோவை வனப்பகுதியில் மனித மிருக மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தீத்திபாளையம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய 5 காட்டு யானை கூட்டம் அருகில் இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, இதனையடுத்து அங்கிருந்து செட்டிபாளையம் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் அருகில் உள்ள குளத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. குட்டி உட்பட 5 யானைகள் குளத்தில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தை தொடர்ந்து அங்கு வந்த கோவை சரக வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டு யானைகள் வனத்துறையினரை தாக்க முற்பட்டது. இதனால் வனத்துறையினர் சிதறி ஓடுகையில் வெள்ளியங்கிரி என்ற வன காவலர் கீழே விழுந்தில் தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் குளத்தில் உள்ள 5 யானைகளை விரட்டுவது குறித்து வனத்திறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பகல் நேரம் என்பதால் யானைகளை விரட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மாலை நேரத்தில் யானைகளை விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.