வால்பாறை: வால்பாறையில் வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் சிறுவர் பூங்கா தேயிலை தோட்டப் பகுதியில் பாழடைந்த மோட்டார் ஷெட் மேற்கூரையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதே போல் வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று மாலை சிறுத்தைப் புலியைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் வசிக்கும் கவிதா என்பவர் வளர்க்கும் ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் குதறியதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலி மனித உயிரை பலி வாங்குதற்கு முன்பு வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.