கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நமது மாவட்டத்தில் இன்னும் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஏழை பெற்றோர்களின் சார்பாகவும், முந்திய கல்வி ஆண்டில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு கோவை ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன் வைத்தனர்.

அதில், அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தளத்திலோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமோ விண்ணப்பிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி உள்ள ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் வரிசை எண் கட்டாயமாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் முன்பாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தகவல் பலகை வைத்தல் வேண்டும். பெற்றோர்களிடம் இருந்து எந்த வகையிலும் பணம் வசூல் செய்யக்கூடாது. மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட கல்வித்துறை இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேர்க்கை பற்றிய விவரங்களை பள்ளியின் முன்புறம் தகவல் பலகையில் வைக்க வேண்டும். இந்த சட்டத்தை முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் இதற்கு என பிரத்யோக உதவி மையம் அல்லது தொடர்பு எண் அமைத்தல் வேண்டும். இந்த சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை மறுக்கும் பள்ளிகளில் மீது கடும் நடவடிக்கையும் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அறிக்கையை வெளியிட வேண்டும்.
இதுபோன்ற சட்டதிட்டங்கள் நமது அண்டை நாடுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நமது மாவட்டம் தமிழகத்திற்கே முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட மக்கள் சார்பாக கோவை ஆம் ஆத்மி கட்சி இணைச் செயலாளர் தாமோதரன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.