கோவை மாநகராட்சியின் 75-வது வார்ட்டிற்குட்பட்ட உப்பிலியான் திட்டு பகுதி மக்கள் காலைக்கடன்களை கழிக்க பொது சுகாதார மையம் அமைத்து தர வேண்டி பல்வேறு மனுக்களை அளித்து வந்துள்ளனர்.
பொது சுகாதார மையம் கட்ட 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரை கழிப்பிடம் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் பகுதியில் சுகாதார வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் பேரவை தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், உரிய சுகாதார வசதிகள் செய்யப்படாததால் ரயில்வே தண்டவாளங்களை காலை கடன்களை கழிக்க பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் ரயில்வேத்துறையின் அபராத தண்டனைகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மேலும் தங்கள் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் என்னவானது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக பொது சுகாதார கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறித்தினர்.
இதையடுத்து மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.