இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், பீட்டாவை தடை செய்ய மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பு வருமென எதிர்பார்த்து இருந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 2012 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்த போது தான் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு உரிமை பறிபோன போது கூட்டணியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் வெளியே வராத திமுக உள்ளிட்ட யாருக்கும் தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை விமர்சனம் செய்ய தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தால் நிரந்தர தடை விதிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், தற்போது கூட நம்பிக்கையுடன் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் தமிழக அரசை கலைக்க வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத பீட்டா அமைப்பிற்கு எந்த உரிமையும் இல்லை என கூறிய அவர், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமெனவும், அதற்கு பாஜக அரசும் முயற்சி செய்யுமென தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டுமென கூறுவது சரியானது அல்ல எனவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர்களை மத்திய பாஜக அரசு ஏமாற்றவில்லை என கூறிய தமிழிசை செளந்திரராசன், தமிழ் உணர்வில் பாஜக யாரை விடவும் குறைந்தவர்கள் இல்லையென தெரிவித்தார்.