தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குவது பவானி ஆறு. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரள மாநிலம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு வரும் இந்த ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து தற்காலிகமாக கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியிலிருந்து 30 வது கிலோ மீட்டர் தொலைவில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்த தாவளம் செல்லும் சாலையில் தேக்கோட்டை எனும் இடத்தில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் முதல்கட்ட பணியை துவங்கியுள்ளது கேரள அரசு. அதற்காக ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அங்கு குவித்துள்ள கேரள அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தையும் நிறுத்தி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் கேரள அரசை கண்டித்தும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகத்தில் தி.மு.க, வி.சி.க, தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த.பெ.தி.கவின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழகத்தின் மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமான பவானி ஆற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணை கட்ட முயற்சித்து வரும் கேரள அரசை கண்டித்து வருகின்ற 21ம் தேதி கோவையில் மனித சங்கிலி போராட்டமும், 29ம் தேதி தடுப்பணை கட்டும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.