தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டிற்காக மாபெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் நேற்று 100 மாணவர்களால் துவங்கப்பட்ட இந்த அறப்போராட்டம் இரவு முழுதும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து அலைகடல் என வ.உ.சி. மைதானத்தில் இன்னும் வந்த வண்ணம் உள்ளனர்.




இரண்டாவது நாளாக தொடரும் இந்தப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்து இன்று காலை 10 மணியளவில் கொடிசியா மைதானத்தில் இருந்து பேரணியாக திரண்டு வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தனர். இன்னும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று கூடி மத்திய அரசு, மாநில அரசையும் மற்றும் பீட்டாவை தடை செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.