கோவையில் நடைப்பெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் ஹிப்ஹாப் ஆதி கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். இன்று கோவையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும். இங்கு அமர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் மவுன மொழியில் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


அரசியல்வாதிகளைப் போல் மாணவர்கள் விரக்தியடைந்து கலவரங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் வாயில் கருப்புத் துணி கட்டி மவுனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது.
தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தில் நேற்று சில பகுதிகளில் காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தில் அரசு கவனம் செலுத்தி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
நமது கலாச்சாரத்தை காக்க இளைஞர்கள் இணைந்து நடத்தி வரும் இப்போராட்டத்தை முடக்காமல் அரசு நிர்வாகமும், காவல் துறையினரும் தீர்வுக்கான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டு காளைகளை கொடுமைபடுத்துவதாக உள்ளது என சிலர் நினைப்பது தவறானது. தேசிய ஊடகங்கள் இதுகுறித்தான உண்மை விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.
நடைமுறைக்கு சாத்தியமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்தப்பட்டு வரும் இப்போராட்டம் வெற்றிபெற வேண்டும். இப்போராட்டம் இவ்வளவு அமைதியான முறையில் எவ்வித சேதமும் இன்றி நடைபெறுகிறது என்றால் அதற்கு மாணவர்களே காரணம். மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும், எம் என் சி போன்ற நிறுவனங்களும் ஜல்லிக்கட்டிற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களை அடக்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நிறுவனத்தினர் இப்போராட்டத்தை கவனித்து கலாச்சாரத்தை காக்க இணைந்து போராட முன்வர வேண்டும்" என்றார்.